Tuesday, 3 November 2015

சகி


 

சகிப்புத்தன்மை இல்லாத உயிரினங்களே இல்லை எனலாம்.  சகிப்புத்தன்மை அனைவரிடமும் உள்ளது ஆனால், அதன் அளவிலும் தன்மையிலும் தான் வேறுபாடு உள்ளது.  அதற்கு கால சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  அதுமட்டுமின்றி தங்கள் எண்ணங்களை எல்லோரும் ஏற்றுகொள்ளவேண்டும் என்ற மனப்பான்மையும் சகிப்புத்தன்மைக்கு தடையாக உள்ளது.  அதேவேளையில் சகிப்புத்தன்மைக்கு ஒரு எல்லையும் உள்ளது.  மொத்தத்தில் ஒருவரது எண்ணங்களை, செயல்களை, பழக்க வழக்கங்களை  எக்காரணங்கொண்டும்  மாற்றிக் கொள்ள வேண்டும் என நாம் கூறக்கூடாது.  நாம் எவ்வாறு உணர்ச்சிக்கு சிக்கிக் கொள்கிறோமோ அதேபோல் தான் மற்றவர்களும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  ஒவ்வொருவரையும் தன் நிலையில் வைத்தும், அவர்களது கண்ணோட்டத்தில் வைத்தும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். 

தவறான புரிதலே பெரும்பாலான பிரச்சனைகளின் தோற்றுவாய். 

எல்லோரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால், இவ்வுலகில் எப்பிரச்சனைகளும் எழாது.  ஆனால், இது நடைமுறை சாத்தியமற்றது என நீங்கள் வினவுவது புரிகிறது.  இருந்தாலும் இதை நாம் பின்பற்றி சோதித்து பார்ப்போமே.  சகிப்புத்தன்மையிலிருந்து விடுபட்டு நாம் செயல்படும்பொழுது நம் ஆற்றல்கள் தான் வீணடிக்கப்படுகின்றன.  இன்றைக்கு எல்லோருக்கும் எத்தனையோ பொருப்புகள், கடமைகள், கனவுகள் உள்ளது அதை நாம் விட்டுவிட்டு நடுவில் கிளம்பும் பிரச்சனைகளின் பயனித்தால் நாம் எவ்வாறு நம் இலக்கினை அடைய முடியும். 

 

இவ்வுலகில் எல்லா உயிர்களும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதால் தான்  இன்று இத்தனை உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியால் பல்கிப் பெருகி இருக்கின்றன.  மாறாக அவ்வுயிரினங்கள் செயல்பட்டிருந்தால் இன்று மனித இனமே இந்த மாபெரும் வளர்ச்சியினை எட்டியிருக்காது. 

 

நீங்கள் உங்களுக்கு எதிராக செயலாற்றுபவரை சகித்துகொண்டு சிறிது காலம் செயலாற்றிபாருங்கள், அவர் உங்களுக்கு கொடுக்கும் தொந்தரவுகள் சிறிது சிறிதாக குறைத்து விடுவார். 

 

நாம் உணர்ச்சிவயப்பட்டு செய்த செயல்களை சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அல்லது நீங்கள் கடந்த காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் செய்தவற்றை நினைத்து பார்த்தீர்களேயானால், உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும்.  தவறு யார்பக்கமோ இருக்கட்டும் அதற்கு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது போதுமானது.  அப்படி செய்தும் நடவடிக்கை இல்லை என்றால்  அதற்கு அடுத்த வழிமுறையை கையாள்வது தான் சரியாக அமையும்.  இவ்வாறு நடந்துகொண்டால் நாம் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமும் இருக்காது.  நம் செயல்களிலும் இலக்குகளை அடைவதிலும் எந்த சுனக்கமும் இருக்காது. 

 

Monday, 2 November 2015

கோழி ஈ

கோழி முட்டை மற்றும் இறைச்சியில் உயர் தரமான புரோட்டீன், தாதுப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் சாதாரண உணவு வகையில் இருப்பதற்கு சமமாக உள்ளது. கோழியின் உரம் அதிக அளவு மற்றும் தன்மை தரக்கூடியது. இதைப் பயன்படுத்துவதால் அனைத்து பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கலாம். ஆனால், இந்த கோழிப் பண்ணைகள் பெரும்பாலும் கிராமபுறங்களிலேயே அமைக்கப்படுகின்றன.  மாசில்லா கிராமப்புறங்களில் பெருமளவில் இப்பண்ணைகள் நோய் பரப்பும் தொழிற்கூடங்களாகவும், அருகிலுள்ள கிராம மக்களை மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.  முட்டை, கோழி தேவை என்பதற்காக கோழிப்பண்ணைகளை கிராமப்புறங்களுக்கு அருகில் அமைத்து அக்கிராம மக்களை சுகாதாரமற்றவர்களாக ஆக்குவது நியாயமா?

கோழிப்பண்ணைகளில் இருந்து எண்ணிலடங்கா ஈக்கள் தினமும் உற்பத்தியாகின்றன.  அவைகள் அருகிலுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்கின்றன.  எங்கு பார்த்தாலும் வீடுகளில் ஈக்கள் மொய்த்து அவரவர் வீடுகளில் இருப்பதற்கு அவர்களையே தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகின்றன.  புகாரளித்து கிராமபுறங்களுக்கு அருகில் இருக்கும் கோழிப்பண்ணைகளை இழுத்து மூட போராடுபவர்களுக்கு எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக அத்தகைய கோழிப்பண்ணையாளர்கள் அரசு வங்கிகளில் பெரும் தொகையை கடன் பெற்றுள்ளோம், இப்பொழுது மூடிவிட்டால் அத்தகைய தொகையை நான் எப்படி திரும்ப கொடுப்பேன் என பதிலை தயார்படுத்திவைத்துள்ளார்கள்.  மாசில்லா கிராமபுறங்களையும் இப்படி மாசடைய செய்வது தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 


ஈ தமிழில் இருசிறகிகள்
இவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன.  இருசிறகிகள் என்பன மிகப்பெரிய உயிரின வரிசை ஆகும். இதில் ஏறத்தாழ 240,000 வகை இனங்கள் அடங்கும்.  இருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும். 
 
இருசிறகிப் பூச்சிகள் தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் மிகப்பெரிய பத்து தொற்று நோய்களில் ஒன்றான நாலாம் தொற்றுநோய் இந்த இருசிறகிப் பூச்சிகளால் வந்ததாக பதியப்பட்டுள்ளது. 
 
ஒரு நபருக்கான முட்டை இருப்பு 41 முட்டைகளாக தற்போது உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பரிந்துரைப்படி ஒரு வருடத்திற்கு ஒரு நபருக்கு 182 முட்டைகள் தேவைப்படுகிறது.  ஆதலால் கோழிப்பண்ணைகள் அவசியம் தான்.  அவைகளை மக்கள் வசிப்பிடமான கிராமங்களுக்கு அருகில் இருத்தல் கூடாது.
 
கூடாரத்தை ஈக்கள்/ கொசுக்கள் மொய்க்காமல், கூடாரத்தை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  ஆனால் ஈக்களை கட்டுப்படுத்துவதில் பெரும்பாலான கோழிப்பண்ணைகள் தோல்வியடைந்துள்ளன. 

ஒவ்வொரு பகுதி வளர்ந்த கோழிகளை அகற்றும் போதும், அதனுடைய மாசுபடிந்த கழிவுகள் மற்றும் உரத்தை அகற்ற வேண்டும். சுவர்கள் மற்றும் தரையை சுத்தப்படுத்த வேண்டும். சுவரை சுண்ணாம்பு கரைசலுடன் 0.5% மாலத்தியான் அல்லது டி.டி.டி திரவம் கலந்து வெள்ளையடிக்க வேண்டும்.  கூண்டு அமைப்பு வைப்பதாக இருந்தால், கோழியின் எச்சங்களை பரப்பி, அதனுடன் சுண்ணாம்புத் தூள் அல்லது 10% மாலத்தியான் தெளிப்பு மாதத்திற்கு 2 முறை தெளித்து ஈக்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம். கூண்டிற்கு அடியில் உள்ள எச்சங்களை 6 மாதங்களுக்குப் பிறகு அகற்றிவிட வேண்டும்.  அனைத்து கருவிகளையும் 0.5% மாலத்தியான் கொண்டு ஒவ்வொரு பகுதி பறவைகள் வெறியேற்றும் போதும், சுத்தமாக கழுவி, நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.  போன்ற விதிமுறைகளில் பெரும்பாலனவற்றை கோழிப்பண்ணைகள் பின்பற்றினாலும் அதனால் ஈக்கள் கிராமப்புறங்களில் தொல்லை கொடுப்பது நீங்குவதில்லை. 

மாசில்லா கிராமங்களை, கிராம மக்களை இவ்வாறு சுகாதர சீர்கேடு அடைய செய்வதை கட்டுப்படுத்துவது மிக அவசியமான ஒன்று.