Tuesday, 27 October 2015

தொலைக்காட்சி தொடர்களே இது நியாயமா?

தொலைக்காட்சிகளில் விதவிதமான எத்தனையோ நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.  ஆனால், தொடர்களுக்கு இருக்கும் இடத்தை எந்த புதிய நிகழ்ச்சிகளாலும் ஆக்கிரமிக்க முடியவில்லை.  தொடர்கள் பெரும்பாலான வீடுகளில் பிரிக்க முடியாதவையாக மாறிவிட்டது.  அவைகளால் நன்மைகளை விட தொந்தரவுகள் நாள் தோறும் பெருகிகொண்டே இருக்கின்றன.  குறிப்பாக ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மறந்து மகிழவே தொலைக்காட்சியை நாடுகிறோம்.  ஆனால், தொலைக்காட்சிதொடர்கள் செயற்கையான கதையில் நம்மையும் சேர்த்து நாம் விரும்பியோ, விரும்பாமலோ பினைக்கப்பட்டு அவர்கள் பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பித்து நம் வேலைகளில் தொய்வு தான் ஏற்படுகிறது. 


இந்த தொலைக்காட்சி தொடர்கள் எத்தனையோ பயனுள்ள தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம்மை புறக்கணிக்க வைக்கிறது. 
அதுமட்டுமல்லாது எவ்வாறு எல்லாம் சதி செய்து கொள்ளலாம் நம் எண்ணங்களை நிறைவேற்ற என நமக்கு தெரியாமலேயே நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறது.  கலை, கலாச்சாரம் எல்லாம் எங்கே போகும் இவ்வாறே நீடித்தால்? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் என விழாக்காலங்களில் மட்டும் போட்டுகொண்டால் போதுமா என்ன. 


இவர்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தால் போதுமா, சமூகத்திற்கு நன்மை நடந்தால் என்ன, தீமை நடந்தால் என்ன என்று இருக்கும் ஊடகங்களை எப்பொழுது புறக்கணிக்குமோ இந்த உலகம். 

இதே தொலைக்காட்சிகள் நம் தமிழ் இலக்கியங்களை காட்சிபடுத்தினால், நாம் பார்க்காமல் இருப்போமா என்ன.   மகாபாரதம், இராமாயணம் ஊடகங்களில் காட்சிபடுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் அவை இரண்டை தவிர வேறு நம் தமிழ் இலக்கியங்களை காட்சிபடுத்தி மக்கள் மனத்தில் நிறுத்தலாம்.  அப்படி செய்தால் எக்காலத்தும் அவர்களை தமிழ் சமுதாயம் போற்றும். 

நம் நூல்கள் அனைத்தும் பிற்காலத்திலாவது தொலைக்காட்சிகளில் காட்சிபடுத்தப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு தமிழ் மீது உள்ள எண்ணம் மாறும் தமிழ் கற்க எல்லையில்லா ஆர்வம் பெருகி கற்பார்கள்.

நன்றி! 

Friday, 16 October 2015

தொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா?தொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா?

 

ஒவ்வொருவருக்கும் ஒரு தொனி அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்.  இந்த தொனி ஒரு சிலருக்கு சாதகமாகவும், மற்றவர்களுக்கு சற்றே பாதகமாகவும் வீன் விமர்சனங்களையும் தருவதாகவும் அமையும்.  தொனியால் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் மிகுதியான தொடர்பு உள்ளது.  நம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்தித்திருப்போம்.  சிலரை நினைத்தால் நம் மனதில் ஒரு நல்ல வகையான எண்ணங்கள் தோன்றும்.  சிலரை நினைத்தாலோ, இல்லை அவர்களை பற்றி பேசினாலோ ஏன்டா அவரைப் பற்றி இப்பொழுது நினைவுபடுத்துகிறாய் என நாம் கேட்போம். 

 

ஒரு வகுப்பாசிரியர் தினமும் பாடம் தொடங்குமுன் அறிவுப்பூர்வமான, அதே வேளையில் நகைச்சுவையாக ஒரு கதையையோ, நிகழ்வினையோ கூறிவிட்டு அன்றைய பாடத்தை தொடங்குவார், பாடத்தை முடிப்பதற்குள் அனைத்து மாணவர்களிடத்தும் கலந்துரையாடி விடுவார்.  சில நாட்களிலேயே அவர் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஆனார்.  இருபது ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அவரின் முகமும் தொனியும் அம்மாணவர்களுக்கு இனிமையானவைகளாக இருக்கும்.  மற்றொரு ஆசிரியர் மாணவர்களை வகுப்பறையில் நான் அனுமதித்தால் தான் எழ வேண்டும், வினா எழுப்ப வேண்டும் என்றும், நன்றாக படிக்கும் மாணவர்களை முன்னுதாரணமாக எப்பொழுதும் கூறிக் கொன்டு, பின் தங்கிய மாணவர்களை எப்பொழுதும் இழிவாக நடத்தி கொண்டும் இருந்தார்.  அவரை நெருங்கவே மாணவர்கள் அஞ்சும் பொழுது மாணவர்களின் ஐயப்பாடுகள் எவ்வாறு தெளிவடையும்.  அவரை நினைத்தாலே எவ்வாறு மனத்தினுள் அம்மாணவர்களுக்கு இனிக்கும்.  இவ்வாறு தொனிக்கு தகுந்தவாறு நம் செயல்களின் விளைவுகள் நிச்சயம் மாறும். 

 

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அவர்களின் தொனியின் தனித்தன்மை உங்களுக்கு நிச்சயம் புரியும்.  இவ்வுலகில் ஒருவருடைய தொனியை மற்றொருவரால் சிறப்பாக செயல்படுத்த முடியாது.  நம் தொனியை நாமே கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், நம் செயல்களை நாம் சில நாட்கள் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  நாம் எச்செயலை எவ்வாறு செய்தால், பிறர் நமக்கு எவ்வாறு பதில்வினை ஆற்றுகிறார்கள் என காணல் வேண்டும்.  கண்ட பின்பு நமக்கு சாதகமானவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும், பாதகமானவற்றை ஒரேயடியாக கைவிடல் என்பது சாத்தியப்படாதது.  அவற்றை சிறிது, சிறிதாக ஒவ்வொன்றாக புறக்கணிக்கப் பழக்கப் படுத்திவிட்டால்.  நம் தொனி மேம்படும். 

 

நம் தொனி மேம்பட்டுவிட்டால், நாம் நம்மை அறியாமலேயே நம்மைப் பற்றிய சமூகப் பார்வைகளை உயர்வடையச் செய்துவிடலாம்.   நமக்கு என்று ஒரு சிறப்பான தொனி அடையாளம் கிடைத்துவிடும்.  இத்தொனி அடையாளமே நம்மைப் பற்றிய மற்றவர்களின் எண்ணங்களை மேம்பாடடைய செய்துவிடும்.  அதன் விளைவாக, அவர்கள் பதில் வினை ஆற்றும் பொழுது, நமக்கு பாதகமான பெரிய பாதிப்புகள் ஏற்படாது. 

 

இவ்வாறாக நம்மில் ஒவ்வொருவரிடமும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இத்தொனியை மேம்படுத்தினால் நிச்சயம் நம்மை மெருகேற்றிக் கொள்ளலாம். 

நன்றி!

Tuesday, 13 October 2015

வேண்டும் தமிழா? இல்லை வேண்டும் தமிழா!

      சரியான புரிதலே ஒருவரை பண்படுத்தும். இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை நாதமாக அமைவது தவறான புரிதலே ஆகும். 

       ஆங்கிலத்தை அரைகுறையாக பேசும் பொழுது நாம் வெட்கப்படுகிறோம்.  அதேவேளையில், நம் தாய்மொழியை பேசும்பொழுது மட்டும் இடையிடையே ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியினையோ கலந்து பேசுவதை ஒரு கௌரவமாக கொள்வது ஏன்?  ஆங்கிலம் உலக மொழி, ஆதலால், அது கற்க வேண்டும், தொழில் மொழி அது ஆதலால் அதை கற்க வேண்டும் என்றால், தாராளமாக கற்று கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள் தவறில்லை.  நம் பாரதியார் பல மொழிகளை கற்று தேர்ந்தவர் தான் என்பதையும் நாம் இங்கே நினைவுகூற வேண்டும். 

      எதுவாயினும் நாம், நம் தமிழை மறக்கக் கூடாது, வாசிக்காமல் இருக்கக் கூடாது.  நான், உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன், தினமும் ஐந்து நிமிடங்களாவது நாளிதழ்களை தமிழில் படியுங்கள்.  நம் தமிழ் சொந்தங்கள், பல்வேறு நாடுகளில் தமிழ் பரப்பும் அதேவேளையில் சில நாடுகளில் தமிழர் என்ற அடையாளம் தகர்க்கப்படுகிறது.  ஏனென்றால், தமிழை ஒரு கலாச்சார மொழியாக ஏதோ ஒரு கூடுதல் மொழியாகத்தான் கற்கிறார்களேயன்றி தாய்மொழி, முதல் மொழி என்று கொள்வதில்லை.  இதற்கு எல்லாம் என்ன காரணம் என நீங்களே அறிவீர்கள். 

     நம் தாய் தமிழ் நாட்டிலேயே தமிழ் வழி கல்வி இனி அரசு பள்ளிகளில் மட்டும் தான் இருக்கும்.  ஆனால், எத்தனை பெற்றோர்கள் தனது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விளைகிறார்கள்?  இவ்வாறே சென்றால் யார் தான் தமிழை பயில்வது? 

     1835ல் மெக்காலே பிரபுவால் புகுத்தப்பட்ட ஆங்கில வழி கல்வியின் தாக்கம் 180 ஆண்டுகளிலேயே இவ்விளைவினை ஏற்படுத்தியுள்ளது.  இன்னமும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொத்தோமேயானால், என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்! 

      தமிழ் எங்கு இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறது.  தமிழகத்தில் எத்தனையோஅரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன.  ஆனால், தமிழுக்காகவே இருக்கும் தஞ்சை, தமிழ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.  அப்போது புரியும்.  ஏனென்றால், பறந்து விரிந்து ரம்யமான இயற்கை சூழலில் இருக்கும் தமிழ் பல்கலைக்கழகத்தில் மற்ற பல்கலைகழகங்களில் இருப்பதை போன்று இப்பல்கலைகழகத்தில் காண்பது அரிது.  மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து கொன்டே வருவதால், பல்வேறு
பாடப் பிரிவுகள் நீக்கப் படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழும் தமிழராகிய நாமும் நம் தனித் தன்மையை இழந்து விடுவோம்.

 இனி நம் முன் உள்ள சவால்கள்

இனையதளங்களில் ஓரளவாவது, ஒவ்வொருவரும் தமிழை பத்து சதவீதமாவது பயன்படுத்துவோம்.
மென்பொருள் உருவாக்கத்தில் மிக பொருந்தக் கூடிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழை மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்துவோம். 
பல்வேறு மென்பொருட்களில் பல்வேறு
மொழிகள் உள்ளன.  அவற்றுடன் தமிழும் இல்லை என நாம் நிச்சயம் ஆதங்கப்பட்டிருக்கிறோம். 
ஆதலால், நாம் அவ்வாறான மென்பொருட்களை தகவல், தொழில்நுட்பத்துறையில் உள்ள நம் தமிழர்கள் உருவாக்கி உதவ வேண்டும். 
மென்பொருட்கள் உபயோகபடுத்தும் பொழுது தமிழ் மொழி உள்ள மென்பொருட்களை உபயோகபடுத்த வேண்டும். 

படித்தமைக்கு நன்றி! நம் தமிழ் சொந்தமே!  

மா.பி. குமார்