Tuesday 13 October 2015

வேண்டும் தமிழா? இல்லை வேண்டும் தமிழா!

      சரியான புரிதலே ஒருவரை பண்படுத்தும். இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை நாதமாக அமைவது தவறான புரிதலே ஆகும். 

       ஆங்கிலத்தை அரைகுறையாக பேசும் பொழுது நாம் வெட்கப்படுகிறோம்.  அதேவேளையில், நம் தாய்மொழியை பேசும்பொழுது மட்டும் இடையிடையே ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியினையோ கலந்து பேசுவதை ஒரு கௌரவமாக கொள்வது ஏன்?  ஆங்கிலம் உலக மொழி, ஆதலால், அது கற்க வேண்டும், தொழில் மொழி அது ஆதலால் அதை கற்க வேண்டும் என்றால், தாராளமாக கற்று கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள் தவறில்லை.  நம் பாரதியார் பல மொழிகளை கற்று தேர்ந்தவர் தான் என்பதையும் நாம் இங்கே நினைவுகூற வேண்டும். 

      எதுவாயினும் நாம், நம் தமிழை மறக்கக் கூடாது, வாசிக்காமல் இருக்கக் கூடாது.  நான், உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன், தினமும் ஐந்து நிமிடங்களாவது நாளிதழ்களை தமிழில் படியுங்கள்.  நம் தமிழ் சொந்தங்கள், பல்வேறு நாடுகளில் தமிழ் பரப்பும் அதேவேளையில் சில நாடுகளில் தமிழர் என்ற அடையாளம் தகர்க்கப்படுகிறது.  ஏனென்றால், தமிழை ஒரு கலாச்சார மொழியாக ஏதோ ஒரு கூடுதல் மொழியாகத்தான் கற்கிறார்களேயன்றி தாய்மொழி, முதல் மொழி என்று கொள்வதில்லை.  இதற்கு எல்லாம் என்ன காரணம் என நீங்களே அறிவீர்கள். 

     நம் தாய் தமிழ் நாட்டிலேயே தமிழ் வழி கல்வி இனி அரசு பள்ளிகளில் மட்டும் தான் இருக்கும்.  ஆனால், எத்தனை பெற்றோர்கள் தனது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விளைகிறார்கள்?  இவ்வாறே சென்றால் யார் தான் தமிழை பயில்வது? 

     1835ல் மெக்காலே பிரபுவால் புகுத்தப்பட்ட ஆங்கில வழி கல்வியின் தாக்கம் 180 ஆண்டுகளிலேயே இவ்விளைவினை ஏற்படுத்தியுள்ளது.  இன்னமும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொத்தோமேயானால், என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்! 

      தமிழ் எங்கு இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறது.  தமிழகத்தில் எத்தனையோஅரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன.  ஆனால், தமிழுக்காகவே இருக்கும் தஞ்சை, தமிழ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.  அப்போது புரியும்.  ஏனென்றால், பறந்து விரிந்து ரம்யமான இயற்கை சூழலில் இருக்கும் தமிழ் பல்கலைக்கழகத்தில் மற்ற பல்கலைகழகங்களில் இருப்பதை போன்று இப்பல்கலைகழகத்தில் காண்பது அரிது.  மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து கொன்டே வருவதால், பல்வேறு
பாடப் பிரிவுகள் நீக்கப் படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழும் தமிழராகிய நாமும் நம் தனித் தன்மையை இழந்து விடுவோம்.

 இனி நம் முன் உள்ள சவால்கள்

இனையதளங்களில் ஓரளவாவது, ஒவ்வொருவரும் தமிழை பத்து சதவீதமாவது பயன்படுத்துவோம்.
மென்பொருள் உருவாக்கத்தில் மிக பொருந்தக் கூடிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழை மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்துவோம். 
பல்வேறு மென்பொருட்களில் பல்வேறு
மொழிகள் உள்ளன.  அவற்றுடன் தமிழும் இல்லை என நாம் நிச்சயம் ஆதங்கப்பட்டிருக்கிறோம். 
ஆதலால், நாம் அவ்வாறான மென்பொருட்களை தகவல், தொழில்நுட்பத்துறையில் உள்ள நம் தமிழர்கள் உருவாக்கி உதவ வேண்டும். 
மென்பொருட்கள் உபயோகபடுத்தும் பொழுது தமிழ் மொழி உள்ள மென்பொருட்களை உபயோகபடுத்த வேண்டும். 

படித்தமைக்கு நன்றி! நம் தமிழ் சொந்தமே!  

மா.பி. குமார்
 

No comments:

Post a Comment