Friday 16 October 2015

தொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா?



தொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா?

 

ஒவ்வொருவருக்கும் ஒரு தொனி அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்.  இந்த தொனி ஒரு சிலருக்கு சாதகமாகவும், மற்றவர்களுக்கு சற்றே பாதகமாகவும் வீன் விமர்சனங்களையும் தருவதாகவும் அமையும்.  தொனியால் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் மிகுதியான தொடர்பு உள்ளது.  நம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்தித்திருப்போம்.  சிலரை நினைத்தால் நம் மனதில் ஒரு நல்ல வகையான எண்ணங்கள் தோன்றும்.  சிலரை நினைத்தாலோ, இல்லை அவர்களை பற்றி பேசினாலோ ஏன்டா அவரைப் பற்றி இப்பொழுது நினைவுபடுத்துகிறாய் என நாம் கேட்போம். 

 

ஒரு வகுப்பாசிரியர் தினமும் பாடம் தொடங்குமுன் அறிவுப்பூர்வமான, அதே வேளையில் நகைச்சுவையாக ஒரு கதையையோ, நிகழ்வினையோ கூறிவிட்டு அன்றைய பாடத்தை தொடங்குவார், பாடத்தை முடிப்பதற்குள் அனைத்து மாணவர்களிடத்தும் கலந்துரையாடி விடுவார்.  சில நாட்களிலேயே அவர் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஆனார்.  இருபது ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அவரின் முகமும் தொனியும் அம்மாணவர்களுக்கு இனிமையானவைகளாக இருக்கும்.  மற்றொரு ஆசிரியர் மாணவர்களை வகுப்பறையில் நான் அனுமதித்தால் தான் எழ வேண்டும், வினா எழுப்ப வேண்டும் என்றும், நன்றாக படிக்கும் மாணவர்களை முன்னுதாரணமாக எப்பொழுதும் கூறிக் கொன்டு, பின் தங்கிய மாணவர்களை எப்பொழுதும் இழிவாக நடத்தி கொண்டும் இருந்தார்.  அவரை நெருங்கவே மாணவர்கள் அஞ்சும் பொழுது மாணவர்களின் ஐயப்பாடுகள் எவ்வாறு தெளிவடையும்.  அவரை நினைத்தாலே எவ்வாறு மனத்தினுள் அம்மாணவர்களுக்கு இனிக்கும்.  இவ்வாறு தொனிக்கு தகுந்தவாறு நம் செயல்களின் விளைவுகள் நிச்சயம் மாறும். 

 

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அவர்களின் தொனியின் தனித்தன்மை உங்களுக்கு நிச்சயம் புரியும்.  இவ்வுலகில் ஒருவருடைய தொனியை மற்றொருவரால் சிறப்பாக செயல்படுத்த முடியாது.  நம் தொனியை நாமே கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், நம் செயல்களை நாம் சில நாட்கள் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  நாம் எச்செயலை எவ்வாறு செய்தால், பிறர் நமக்கு எவ்வாறு பதில்வினை ஆற்றுகிறார்கள் என காணல் வேண்டும்.  கண்ட பின்பு நமக்கு சாதகமானவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும், பாதகமானவற்றை ஒரேயடியாக கைவிடல் என்பது சாத்தியப்படாதது.  அவற்றை சிறிது, சிறிதாக ஒவ்வொன்றாக புறக்கணிக்கப் பழக்கப் படுத்திவிட்டால்.  நம் தொனி மேம்படும். 

 

நம் தொனி மேம்பட்டுவிட்டால், நாம் நம்மை அறியாமலேயே நம்மைப் பற்றிய சமூகப் பார்வைகளை உயர்வடையச் செய்துவிடலாம்.   நமக்கு என்று ஒரு சிறப்பான தொனி அடையாளம் கிடைத்துவிடும்.  இத்தொனி அடையாளமே நம்மைப் பற்றிய மற்றவர்களின் எண்ணங்களை மேம்பாடடைய செய்துவிடும்.  அதன் விளைவாக, அவர்கள் பதில் வினை ஆற்றும் பொழுது, நமக்கு பாதகமான பெரிய பாதிப்புகள் ஏற்படாது. 

 

இவ்வாறாக நம்மில் ஒவ்வொருவரிடமும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இத்தொனியை மேம்படுத்தினால் நிச்சயம் நம்மை மெருகேற்றிக் கொள்ளலாம். 

நன்றி!

No comments:

Post a Comment